இன்றைய தியானம் 13-06-2018 (Bible Special)
“. .. இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.” - சங்கீதம் 1:2
வேதத்தில் எத்தனை வசனங்கள் இருக்கின்றன? என்று கேட்டால், ஒரு வேளை நீங்கள் இரவும், பகலும் எண்ணி சொல்லிவிடுவீர்கள். ஆனால் வேதத்தில் எத்தனை எழுத்துக்கள் இருக்கின்றன என்று கேட்டால் திகைத்துப்போவீர்கள். உதாரணமாக, தமிழ் வேதாகமத்தில் முதலாம் சங்கீதம், முதல் வசனத்தில் மட்டும் 62 எழுத்துக்கள் இருக்கின்றன. முழு வேதாகமத்திலும். . . . ?
ஒரு இளவரசன் எண்ணி முடித்தார். பழைய ஏற்பாட்டில் 27,28,100 எழுத்துக்களும், புதிய ஏற்பாட்டில் 8,38,380 எழுத்துக்களும், மொத்தம் 35,66,480 எழுத்துக்களும் இருக்கின்றன என எண்ணி முடித்தார். யார் இந்த இளவரசன்? அவர் ஸ்பானிய தேசத்து இளவரசன். அவர் தேவபக்தியுள்ளவராகவும், கல்வாரி அன்பினால் நிறைந்தவராகவும் இருந்தார். அந்தோ! திடீரென்று இராணுவப் புரட்சி வெடித்தது. இராணுவ தளபதி, ஆட்சியைக் கைப்பற்றி இளவரசனை சிறையில் தள்ள உத்தரவிட்டான். இதை அறிந்த இளவரசன் தன் அறைக்குள் ஓடி வேதத்தை எடுத்து, அதை தன் சட்டைக்குள் மறைத்து வைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்டார்.
நாட்களும், மாதங்களும், வருடங்களும் நத்தை வேகத்தில் நகர்ந்து 33 ஆண்டுகள் கடந்தன. கடைசியில் அவர் ஆத்துமா, அவர் சரீரத்தினின்றும், சிறையிலிருந்தும் விடை பெற்றுக் கொண்டது. அவரை அடக்கம் செய்யும்படி அறைக்குள் வந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது என்னவென்றால், ஒரு பழைய ஆணியைக் கொண்டு அந்த இளவரசன் எழுதி வைத்த வேதாகமக்குறிப்புகள்தான். வேதத்திலிருக்கும் வசனங்கள் எத்தனை, வார்த்தைகள் எத்தனை, எழுத்துக்கள் எத்தனை என்று எல்லாமே அங்கே செதுக்கப்பட்டிருந்தன. மட்டுமல்ல, வேதத்தின் மத்திய வசனம், மிகச்சிறிய வசனம், கர்த்தர் என்று வரும் இடங்கள், ஒன்று போல் இருக்கும் வசனங்கள் என்று எத்தனையோ அரும்பெரும் வேத ஆராய்ச்சிகளை அந்த அறையில் ஆங்காங்கே ஆணியால் எழுதி வைத்திருந்தார். சிறையில் 33 ஆண்டுகள் அவர் செய்த காரியம் இதுவே!
தேவனுடைய பிள்ளைகளே! இந்த இளவரசன் நம் எல்லோருக்கும் ஒரு முன் மாதிரியல்லவா? நாம் தனிமையாய் இருக்கும் நேரத்தை வேதத்துடன் செலவிட விரும்புகிறோமா? வேத தியானம் நமக்கு இனிமையாயிருக்கிறதா? வேதம் நமக்கு இனிமையாயிருக்குமென்றால், அதிலுள்ள அதிசயங்களைக் காணும்படி இன்னும் அதை ஆராய்ச்சி செய்து, வசனத்தின் ஆழத்தை அறிய நாம் தோண்டிக் கொண்டேயிருப்போம். இல்லையென்றால் பெயருக்காகவும், கடனுக்காகவும் ஒரு அதிகாரத்தை வாசித்துவிட்டு திருப்தி கண்டிடுவோம். நமது வேத தியானம் எப்படி என்று சிந்திப்போம். வேதத்தை வாஞ்சையோடு, தாகத்தோடு வாசிப்போம். அது நம்மோடு பேசும். ஏனெனில் வேதவசனம் ஜீவனுள்ளது.
ஜெபக்குறிப்பு:
பணித்தளம் மாறுதல் ஆகி சென்றுள்ள நமது மிஷனெரிகளை தேவன் வல்லமையாய் எடுத்து பயன்படுத்த ஜெபியுங்கள்.
No comments:
Post a Comment